குழந்தைகளுக்கான உணவு அட்டவணை

குழந்தைகளுக்கான உணவு அட்டவணை

ஒரு குழந்தை மண்ணில் பிறந்ததில் இருந்து தனது வளர்இளம் பருவத்தை எட்டும்வரை உணவுத் தேவைக்கு பெற்றோர்களை நம்பியே இருக்கிறது.

பிறந்த ஆறுமாதம் கட்டாயம் தாய்பால் மட்டும் கொடுக்கப்படுகிறது .இதை Exclusive Breast Feeding என்போம்.

இந்த தாய்ப்பாலில் நிறைந்திருப்பது என்ன ??

தாய்ப்பாலில் இரண்டு வகை இருக்கிறது

1.முன் சுரக்கும் பால் ( fore milk)

2. பின் சுரக்கும் பால் ( hind milk )

குழந்தை பால் உறிஞ்ச தொடங்குகையில்,

முன் சுரக்கும் பாலில் அதிக தண்ணீரும் க்ளூகோசும் இருக்கும்..

இது குழந்தைக்கு ஏற்படும் தாகத்தை சரிசெய்து விடும்

பிறகு சுரக்கும் பின் பாலில் கொழுப்பு நிறைந்திருக்கும் இது குழந்தையின் பசியை போக்கும்.

இப்படி குழந்தை பிறந்த முதல் ஆறுமாதங்கள் கழிந்துவிடுகின்றன.

அதன் பிறகு எப்படி உணவைக் கொடுப்பது??

டப்பாக்களில் வரும் செயற்கை உணவுகளில் பெரும்பான்மை சேர்க்கப்படுவது சர்க்கரையே ஆகும் .

இந்த சர்க்கரை தான் இனிப்பு சுவையை கொடுத்து குழந்தையை அதிகமாக உண்ண வைத்து கொழுக்க வைக்கிறது.

மற்றபடி முக்கால்வாசி செய்ற்கை உணவுகளில் இருப்பது நாம் உண்ணும் அரிசி மற்றும் கோதுமை தான்.

ஆகவே,

நமது குழந்தைகளுக்கு பிசைந்த /குழைந்த அரிசி சாதம் கொடுக்கலாம்.

வேக வைத்த உணவான

இட்லி கொடுக்கலாம்.

பசுவின் பாலானது பெரும்பாலான நமது குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒத்துக்கொள்கிறது. . எனக்குத் தெரிந்து பசுவின் பாலை மூன்று மாதத்தில் இருந்து கொடுக்கும் தாய்மார்களைக் காண்கிறேன். இருப்பினும் பசுவின் பாலை ஒருவயதுக்கு பின் அறிமுகப்படுத்துவது சிறந்தது

அசைவ உணவு வகைகளில் ஆறு மாதம் சென்ற பின்

முதலில் ஆரம்பிக்கப்பட வேண்டியது

“முட்டையின் மஞ்சள் கரு”

முட்டை போன்ற ஒரு சிறந்த புரதச்சத்துள்ள ஒரு பொருளை பாரினில் காண முடியாது. முட்டையில் உள்ள புரதம் மிகவும் தலை சிறந்த ஹை க்வாலிட்டி புரதமாகும். இதை உடல் கிட்டத்தட்ட 100 சதவிகிதம் கிரகித்துவிடும்.

அடுத்து… மீன் வகைகளை அறிமுகப்படுத்தலாம். மீனை அவித்து கொடுக்கலாம்.

ஏழு எட்டு மாதம் நடக்கும் போது இறைச்சி சூப் செய்து ஊட்டலாம்.

நன்றாக சமைத்த ஆட்டு ஈரலை சோறோடு பிசைந்து ஊட்டலாம். தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.

சர்க்கரை கலந்த செய்ற்கை பண்டங்களை தவிர்ப்பது நல்லது

சாக்லேட் மிட்டாய்களை இயன்றவரை தவிர்ப்பது நல்லது.

வாரம் ஒரு முறை விடுமுறை தினங்களில் சாக்லேட் கொடுக்கலாம்

குழந்தைகளை பழங்கள் விசயத்தில் தடுக்க தேவையில்லை

அவர்கள். விரும்பும் பழங்களை தினமும் கொடுக்கலாம்.

காய்கறிகளை சாலட்/ சூப் போன்று செய்து குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே கொடுத்து தினமும் காய்கறி சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் .

எண்ணெயில் பொறித்த ஜங்க் ஃபுட்களை தவிர்க்க வேண்டும்

(c)drfarooksivagangai

காலை வேலையில் டீ காபிக்கு பதில் பால் மட்டும் குடிப்பது நல்லது

டீ காபி பழக்கத்தை ஆரம்பத்திலேயே களைவது நல்லது.

எனர்ஜி ட்ரிங்குகள் அனைத்திலும் நிரம்பி இருப்பது

“சர்க்கரை” மட்டுமே.

சர்க்கரை கலந்த நீரை பருகுவதும்

எனர்ஜி ட்ரிங்குகளை குடிப்பதும் ஒன்று தான்.

ஆகவே இவற்றை குழந்தைகளுக்கு கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இப்போது பெரும்பாலான குழந்தைகள் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ்களை விரும்புகின்றனர். ஆனால் அவற்றுள் கலந்திருப்பது ஒவ்வாமை ஏற்படுத்தும் ரசாயனங்கள் தான்.

செயற்கை சுவை கூட்டிகள் அதிகம் சேந்க்கப்படுகின்றன.

HFCS எனும் High Fructose Corn syrup சேர்க்கப்பட்ட இனிப்பு பண்டங்கள் அனைத்தும் குழந்தைகளின் கல்லீரலுக்கு உலை வைப்பவை. சமீபத்தில் எட்டு வயது சிறுவனுக்கு கல்லீரல் வீக்க நோய் இருப்பதைக் கண்டேன்.

பாலில் தேவைப்பட்டால் பனங்கற்கண்டு/ நாட்டு சர்க்கரை போன்றவற்றை சிறிது சுவைக்காக சேர்த்து குடிக்க கொடுக்கலாம்.

என்னைக்கேட்டால் எந்த இனிப்பும் போடாமல் பால் கொடுத்துப்பழக்குவதே சிறந்தது.

குழந்தைகளை நம்மால் ஐந்து வயது வரை ஏப்படி வேண்டுமானாலும் பழக்க முடியும் என்பதையும் பதிவு செய்கிறேன்

பெரும்பாலும் தாயும் தந்தையும் எதை செய்கிறார்களோ? அதையே குழந்தைகள் செய்கின்றன. நாம் வீட்டில் எதை உண்கிறோமோ? அதையே குழந்தைகள் உண்கின்றன. எனவே , பெற்றோர்களாகிய நாம் எதை உண்கிறோம் என்பதில் அதீத பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

இனிப்பு பிடிக்காத தாய் பெற்றெடுக்கும் பிள்ளைகளும் இனிப்பு அதிகம் கொடுக்கப்படாமல் வளர்க்கப்படுவர்

அசைவம் பிடிக்காத தாயின்பிள்ளைகளும் அந்ந அசைவ உணவுகள் மறுக்கப்பட்டு வளர்க்கப்படுவர்.

இது போன்று தாய் தந்தை உணவு மீது கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகள் மற்றும் விருப்பங்கள் அவர்களது அடுத்த சந்ததியின் உடல் நலனில் குந்தகம் விளைவிக்கிறது.

ஒரு தாய்க்கு உணவு சார்ந்த நல்லறிவை ஊட்டினால் அது அவளது சந்ததிக்கும் கடத்தப்பட்டு காலம் காலமாக அறிவுப்பரிமாற்றம் நடக்கிறது.

மூடநம்பிக்கைகளும் அவ்வாறே கடத்தப்படுகிறது.

மூடநம்பிக்கையின் சங்கிலியை உடைத்து அதை அறிவியல் சார்புள்ள நம்பிக்கையாக மாற்றியாக வேண்டும்.

சரி டயட் சார்ட்டுக்கு வருவோம்

காலை உணவாக நாம் உண்ணும் இட்லி தோசை போன்றவற்றை கொடுக்கலாம்

மதியம் அரிசி சாதத்தை கஞ்சி வடிகட்டியதாக இருக்குமாறு கொடுக்கலாம்.

கூட காய்கறிகள் அதிகம் இருக்குமாறும் , அனுதினம் வேறு வேறு காய்கறிகள் உண்ணுமாறு கொடுக்க வேண்டும்.

ஒரே காய்கறியை கொடுத்தால் குழந்தைகள் அலுப்புதட்டி அவற்றை உண்ணாது. ஆகவே வெரைட்டி முக்கியம்.

இரவு ஒரு முட்டை சேர்த்து கலவை சாதம், பருப்பு சாதம் அல்லது இட்லி போன்றவற்றை ஊட்டலாம் . கீரை சாதம் ஊட்டலாம்

இனிப்புகளை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சிறந்தது.

முடிந்தவரை உணவகங்களை தவிர்ப்பது நல்லது

இயன்றவரை தவிர்க்க வேண்டிய உணவுகள்

1. சோயா ( ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் அதிகம் )

2. கோதுமை ( க்ளூடன் )

3. மைதா ( க்ளூடன் மற்றும் அலாக்சான்)

4. சாக்லேட் ( அதீத இனிப்பு)

5. ப்ரட் ( மைதா + சீனி)

6. கேக் வகைகள் ( மைதா + சீனி)

7. குளிர்பானங்கள் ( சீனி)

8. எனர்ஜி ட்ரிங்க்ஸ் ( சீனி)

9. பொறித்த உணவுகள் ( ஊறு விளைவிக்கும் கொழுப்புகள்)

குழந்தைகளுக்கு ஸ்ட்ரிக்ட் குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை தேவையில்லை.

அவர்களுக்கு மிதமான அளவில் ஆரோக்கியமான மாவுச்சத்தை கொடுத்து வளர்க்க வேண்டும்

பள்ளிகளில் சாக்லேட் கொடுத்தால் அதை வீட்டுக்கு வந்து தாயிடம் காட்டிவிட்டு உண்ணும் முறையை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ஆடம்பரத்தை காட்டுவதை விடவும் தர்ம சிந்தனையுடன் வளர்ப்பது சிறந்தது.

ஏழைகளின் பசியைக் காட்டி உணவு விசயத்தில் மேம்போக்காக இருக்கக்கூடாது என்பதை விளக்கலாம்.

தினமும் அவர்களை ஓடியாடி விளையாட ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கான “screen time”ஐ வரைமுறைபடுத்திட வேண்டும்.

குழந்தை பருவத்தை பொறுத்தவரை சோம்பேறித்தனம் இல்லாத சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பழக்கப்படுத்த வேண்டும்.

சிறு வயதில் இருந்தே இப்படி நாம் குழந்தைகளை வளர்ப்பது எதிர்காலத்தில் அவர்கள் உணவு பழக்கத்தை நல்ல முறையில் அமைத்து கொண்டு நோய்கள் இன்றி வாழ வழிசெய்யும்

நன்றி

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை