முடக்கு வாதம் – ரியூமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ்
முடக்கு வாதம் – ரியூமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ்
தற்போதைய காலகட்டத்தில் 30 முதல் 60 வயதுக்குள் இருக்கும் மக்களுக்கு முடக்கு வாத நோய் அதிகமாக தோன்ற ஆரம்பித்திருக்கிறது
இதை பலரும் எலும்புத்தேய்மான நோய் என்றே எண்ணி நாட்களை கடத்தி வருவதையும் காண முடிகின்றது
Osteo arthritis என்பது பெரும்பான்மை முதுமையினால் ஏற்படும் எலும்புத்தேய்மான நோயாகும்.
ஆனால் ரியூமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ் என்பது இளையோர் மத்திய வயதினர் முதியோர் என்று பாரபட்சமின்றி தோன்றும் நோயாகும்.
நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம்
நமது எலும்புகளுக்கு இடையே உள்ள மூட்டுகளையே தங்களது எதிரிகளாக பாவித்து அவற்றை தாக்கி அழிக்க முற்படுகின்றன.
இவ்வாறு நமது எதிர்ப்பு சக்தியே நமக்கு எதிராக வேலை செய்து அதன் மூலம் வரும் நோய்களை ஆட்டோ இம்யூன் நோய்கள் ( தன்னெதிர்ப்பு நோய்கள்) என்று அழைக்கிறோம்
சோரியாசிஸ்,
ஆட்டோ இம்யூன் தைராய்டு நோய்,
லூபஸ்,
விட்டிலிகோ,
டைப் ஒன்று டயாபடிஸ்
ஆகிய நோய்களின் பட்டியலில்
ரியூமடாய்டும் ஒரு ஆட்டோ இம்யூன் நோயாக இணைகின்றது
இந்த நோயின் தனித்தன்மை யாதெனில்
முதுமை மூலம் வரும் மூட்டு தேய்மான நோயில் பெரும்பாலும் நமது உடல் எடையைத் தாங்கிப்பிடிக்கும் மூட்டுகளிலேயே ( கால் முழுங்கால்/ கணுக்கால் முட்டி) அதிக வலி தோன்றும்.
ஆனால் ரியுமடாய்ட் ஆர்த்ரைடிஸ் நோயில்
சிறு சிறு எலும்பு பூட்டுகள் இருக்கும் கை மற்றும் கால் விரல்களில் அதிக வலி இருக்கும்.
அதிகாலையில் இந்த எலும்பு பூட்டுகள் அனைத்தும் இறுகிக்கொள்ளும். பிறகு மெல்ல மெல்ல இலகுவாகும்
வலி -வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு ரண வேதனையைத் தரும்.
அன்றாட வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைக்கும் அளவு பிணியைத் தரும் நோயாக இது இருக்கிறது
மேற்கண்ட அறிகுறிகளை தொடர்ந்து பல நாட்கள் ஒருவர் கொண்டிருந்தால்
முறையாக அவர் முடக்குவாத சிறப்பு நிபுணரை சந்திப்பது மிகச் சிறந்தது
MD பயின்று முடித்து
இது போன்ற வலி தரும் முடக்குவாத நோய்க்கு சிகிச்சை அளிப்பது பற்றியே மேற்கொண்டு இரண்டு வருடம் சிறப்பு பயிற்சி பெறுவதே DM ( Rheumatology) படிப்பாகும்.
இத்தகைய படிப்பை படித்து முடித்த நிபுணரை Rheumatologist என்று அழைக்கிறோம்.
சென்னை , மதுரை , நெல்லை , சேலம், திருச்சி போன்ற அனைத்து நகரங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் ரியுமடாலஜிக்கு தனிப்பிரிவு உண்டு.
அங்கு சென்று சிகிச்சை பெறலாம்
தனியார் மல்ட்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளில் பெரும்பான்மையில் ரியூமடாலஜிக்கு என்று தனி துறை உண்டு.
ஏன் இந்த முடக்கு வாதத்திற்கு முறையான சிகிச்சை எடுக்க வேண்டும்?
முறையான சிகிச்சை எடுக்காவிட்டால் என்ன ஆகும்?
ரியூமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ் பாதித்த ஒருவரின்
எலும்புகளுக்கு இடையே உள்ள மூட்டின் ஜவ்வுகளை மெல்ல மெல்ல அரித்து தின்று விடும்.
மூட்டுகளில் இரண்டு எலும்புகளை உராய்வில் இருந்து பாதுகாக்கும் திரவ அமைப்பை சிதைத்து மெல்ல மெல்ல எலும்புகள் சிதிலமடையும்
கொஞ்சம் கொஞ்சமாக கை கால் கழுத்து என்று ஒவ்வொரு மூட்டாக தன் வேலையைக் காட்டி நிரந்தரமான பாதிப்பை உருவாக்கி
கை விரல்களை வளைத்தல்
ஊனமாக்கி முடமாக்குதல் வரை அனைத்தையும் செய்ய வல்லது இந்தக் கொடிய நோய்.
நம்மில் பலரும் இந்த நோய் இருப்பதை கண்டறியவதற்குள்ளேயே சில வருடங்களை கடத்தியிருப்பர்.
இதற்கான காரணம்..
வலி நிவாரணிகளை உட்கொண்டாலே இந்த நோய் தரும் கடும் வலியில் இருந்து தப்பித்து விடலாம். இது அறிகுறியை மட்டுமே சரி செய்யும்
ஆனால் உள்ளே மூட்டுகளை பாதிக்கும் நோயை சரி செய்ததாக ஆகாது.
இன்னும் பலர் தொடர்ந்து மருந்தகங்களில் ஒரு வலி நிவாரணி + ஒரு ஸ்டீராய்டு மாத்திரை என்று செட் மாத்திரை தினமும் உட்கொண்டு வருவார்கள்.
இவர்களுக்கும் வலி மட்டுமே கேட்குமே அன்றி நோய் முற்றி முடக்கப்போவதை தடுக்க இயலாது.
இன்னும் பலர்
மாற்று மருத்துவ முறைகள் நவீன மருத்துவம் என்று மாறி மாறி வலம் வருவார்கள்.
எங்காவது இந்த முடக்கு வாதம் தரும் பிணியை நிரந்தரமாக நிறுத்தி முற்றிலுமாக ஒழித்து விடமாட்டார்களா? என்ற ஏக்கமே இதற்குக் காரணம்.
ரியுமடாய்ட் மக்களுக்கு நான் கூறும் செய்தி இன்னும் பிணியை அதிகமாக்கலாம் ஆயினும் உண்மை இதுவே
இதுவரையில் எந்த ஆட்டோ இம்யூன் வியாதியையும் முழுமையாக குணப்படுத்தும் சிகிச்சை அறிவியல் ஆய்வுகள் மூலம் நிரூபணமாகிய சிகிச்சை முறை அமலில் இல்லை.
ஆனால் முடக்கு வாதத்தின் பிணியை கட்டுப்படுத்தி அது மூட்டுகளை சிதைக்கும் வேகத்தை மட்டுப்படுத்தி
மூட்டுகளை நிரந்தரமாக அழிவதில் இருந்து முடிந்த வரை தடுத்து ஒருவர் முடமாவதை தடுக்கும் மருந்துகள் நவீன அறிவியல் மருத்துவத்தில் உண்டு.
இத்தகைய மருந்துகளை DMARDs என்று அழைக்கிறோம்
இதன் விரிவாக்கம்
Disease Modifying Anti Rheumatoid Drugs
அதாவது நோயின் போக்கை மாற்றியமைக்கும் ஆற்றல் பெற்ற மருந்துகள் என்று பெயர்.
மீத்தோட்ரெக்சேட்
சல்ஃபாசாலசின்
லெஃப்லூனமைடு
ஹைட்ராக்சி குளோரோகுயின்
மேற்சொன்ன நான்கும் அவற்றுள் முக்கியமானவை
இவற்றுடன் பிணியை குறைக்க வலி நிவாரணிகளையும் மருத்துவர் அவ்வப்போது பரிந்துரைப்பார்.
இதற்கான காரணம்
ஆட்டோ இம்யூன் வியாதிகள் அனைத்துமே
அதன் போக்கில் WAXING & WANING என்ற நிலையிலேயே மாறி மாறி இருக்கும்.
அதாவது சில நாட்கள் நோய் அறிகுறி மிகவும் குறைவாக இருக்கும்.
நோய் சரியாகிவிட்டது என்று நம்பும் அளவுக்கு அறிகுறிகளே இல்லாமல் போய் விடும். ஆனால் மீண்டும் சில நாட்களுக்குப் பிறகு முன்பை விட அதிகமான வலியை தந்து மனவலிமையையும் உடல் வலிமையையும் சோதிக்கும்.
ஆம் . ரியுமடாய்டு ஆர்த்ரைட்டிஸ் தரும் வலி பலமான மனதைக்கூட தற்கொலை எண்ணங்களுக்கு தூண்டும் அளவு வலிமை கொண்டது. இதை குடும்ப உறுப்பினர்கள் உணர்ந்து அவர்களை அரவணைக்க வேண்டும். தனிமையில் அவர்களை விடவே கூடாது. தேவைப்பட்டால் மன நல மருத்துவ ஆலோசனையும் தர வேண்டியிருக்கும் என்பதையும் பதிவு செய்கிறேன்.
ரியூமடாய்ட் ஆர்த்தரைடிஸ்க்கு எதிராக செயல்படும் என்று நிரூபணமான DMARDs
களை மருத்துவ பரிந்துரையில் அவரது மேற்பார்வையில் வாழ்நாள் முழுமைக்கும் தொடர்ந்து எடுக்க வேண்டியிருக்கும்.
மாத்திரைகளின் அளவுகள் நோயின் நிலைக்கு ஏற்ப கூடும். குறையும்.
மேலும் மேற்சொன்ன மருந்துகளுக்கு அவைகளுக்கே உரிய பக்க விளைவுகளும் உண்டு. அவற்றை முறையாக கண்டறிந்து மருந்துகளை மாற்றியமைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு முறையாக மருத்துவரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சந்திக்க வேண்டும்.
ரியூமடாய்ட் அர்த்ரைடிஸை பொறுத்த வரை
எனது கருத்து யாதெனில் முறையான நவீன மருத்துவத்தை மருத்துவ நிபுணரின் கண்காணிப்பில் தொடர்ந்து எடுப்பது நீண்ட நாள் நன்மைக்கு உதவும். மருத்துவர்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதும் நல்லதல்ல. மருத்துவ முறைகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதும் பயன்தராது.
ரியூமடாய்ட் மக்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
1. இனிப்பு சுவை தரும் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்
2. கோதுமை
3. மைதா
4. வெஜிடபுள் எண்ணெய்கள்
5. எண்ணெயில் பொறித்த பண்டங்கள்
6. தானியங்களை முடிந்த அளவு தவிர்ப்பது சிறந்த பயனை தருகின்றது.
7. வெளிப்பண்டங்கள்
8. வீட்டில் சமைக்கப்படாத உணவுகள்
9. மது / புகை
10. செயற்கை நிறமிகள்/ செயற்கை சுவைமிகள்/ குளிர்பானங்கள்
11. பீன்ஸ் / கடலை / கொட்டை வகைகள்
ரியூமடாய்ட் மக்கள் சேர்க்க வேண்டிய உணவுகள்
1. நெய்
2. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்
3. மாமிசம்
4. காய்கறிகள்
5. முட்டைகள
6. மீன் வகைகள்
7. தானியங்கள் சேர்க்க வேண்டுமென்றால் அளவாக அரிசி மட்டும் எடுப்பது சிறந்தது.
கோதுமை/ மைதா முழுமையாக தவிர்க்க வேண்டும்.
8. பால்/ பனீர் ( மரக்கறி உணவாளர்களுக்கு)
மேலும் முடக்கு வாதத்தினால் ஏற்படும் முடக்கத்தை சரிசெய்ய தினமும் நோயாளிகள் தங்களுக்குத் தாங்களே செய்து கொள்ளும் இயன்முறை சிகிச்சை அவசியம்.
இவற்றை இயன்முறை சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்று தினமும் செய்து வர வேண்டும்.
இது மூட்டுகள் இறுக்கமாவதை தடுக்கும். தளர்வுடன் இருந்து நன்றாக பணி செய்ய உதவும்.
மேற்சொன்ன உணவு முறை மாற்றத்தையும் புகுத்தி முறையான சிகிச்சை எடுத்து மூட்டுகளின் நலனைப்பேணிக்காத்திட வேண்டி இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்
பிணியற்ற வாழ்வை ரியூமடாய்ட் மக்களுக்கு பிரார்த்தனை செய்கிறேன்
நன்றி
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை