கொரோனா: வைரஸை விட வேகமாகப் பரவும் வதந்திகள்

(தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிடும் புத்தகத்தில் வந்த கட்டுரை. இந்தக் கட்டுரை தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடாக வந்தாலும், பிறரும் பகிரலாம், பிரசுரிக்கலாம். இப்போதைய தேவை, சீனா தயாரித்த உயிரியல் ஆயுதம் இது, சூப் குடித்ததால் இது வந்தது, சூரிய ஒளியில் நின்றால் கொரோனா வராது இப்படி அநியாய வதந்திகளில் இருந்து விடுபடுவது, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது மட்டுமே)

கடந்த ஆண்டு திசம்பரில் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று இப்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது. உலகின் பல பகுதிகளில் வேகமாக பரவிவருகிறது. சீனாவின் வூஹான் பிராந்தியம் மூடப்பட்டதாக செய்திகளில் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது கேரளாவில் பல மாவட்ட செயல்பாடுகள் மூடப்பட்டிருக்கிறது. மார்ச் 24, இரவு ஏழு மணிவரை கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பவர்கள் எண்ணிக்கை 395,502; இவர்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை: 17,229. இந்தியாவில் மட்டும் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 519. நாற்பது பேர் ஏற்கனவே குணமடைந்தும் விட்டார்கள். பத்து பேர் மரணம் அடைந்தார்கள் என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த எண்ணிக்கைகள் நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும்.

மூன்று மாதங்களில் மூன்று நான்கு லட்சம் பேரை மட்டும்தான் கொரோனா பாதித்திருக்கிறது. ஆனால், நூறு கோடி மக்களுக்கும் மேல் ஒன்று பாதித்திருக்கிறது! இதுவரை அதனால் உயிரிழப்பு எதுவும் இல்லையென்றாலும், இனிமேல் எதுவும் நடந்துவிடுமோ என்று பயப்பட வேண்டியுள்ளது. அப்படி என்ன விஷயமென்றால், கொரோனா குறித்து பரவும் வதந்திகள்தான் அது! கொரோனா பரவுவது குறித்தும், கொரோனாக்கு மருந்து என்றும் கிளம்பும் வதந்திகளே உயிரைப் பறிக்கும் வாய்ப்பு இருப்பதால் வைரஸை விட வேகமாகப் பரவும் வதந்திகள் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

கொரோனா வைரஸ் என்றால் என்ன?

கொரோனா வைரஸ்கள் விலங்கு வழி தொற்றும் வைரஸ்கள். விலங்கு என்றால், மனிதனும் அடக்கம். இதுவரை ஏழு வகையான கொரோனா வைரஸ்கள் மனிதர்களிடமும், விலங்குகளிடையேயும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா என்றால் கிரீடம் என்று பொருள். நுண்ணோக்கி வழியே காணும்போது – கொரோனா வைரஸ்களின் பரப்பில் கிரீடம் போன்ற கூர்முனை ஏற்பிகள் இருப்பதால், இந்தப் பெயர். சாதாரண சளி ஏற்படுத்தும் கொரோனா வைரஸில் இருந்து, இறப்பை ஏற்படுத்தக்கூடிய சார்ஸ் (SARS), மெர்ஸ் (MERS) போன்ற ஏழு வகை கொரோனா வைரஸ்கள் நமக்குத் தெரியும். பொதுவாக, மேல்-நுரையீரல் சார்ந்த நோய் அறிகுறிகளை இவை ஏற்படுத்தும். இப்போது நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வைரஸின் பெயர் – SARS-CoV-2, இந்த வைரஸ் நமக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நோயின் பெயர் – COVID-19. COVI என்றால் COronaVIrus, D என்றால்Disease மற்றும் 19 என்பது இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு. இன்றைய நிலையில் பொதுவாக நாம் கொரோனா வைரஸ் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

கொரோனா வைரஸ் தொடங்கியது சார்ந்த வதந்திகள்

கொரோனா வைரஸ் எங்கிருந்து தொடங்கியது? இந்த கேள்வியைச் சுற்றித்தான் ஒரு மோசமான வதந்தி உலா வந்துகொண்டிருக்கின்றது.

இந்த கொரோனா வைரஸ் சீனாவின் வூஹானில் உள்ள நச்சுயிரியல் நிறுவனத்தில் (Institute of Virology) தொடங்கியதாகச் சொல்லும் ஒரு வதந்தி. நச்சுயிரியல் நிறுவனங்களில் ‘உயிரியல் பாதுகாப்பின்’ தேவையைப் பொருத்து நான்கு அடுக்குகளில் குறிப்பிடுவார்கள். நான்காவது அடுக்கு என்றால், இறப்பை ஏற்படுத்தக்கூடிய அளவு மோசமான நச்சுயிர்களைப் பற்றிய ஆய்வு செய்வார்கள். வூஹான் நச்சுயிரியல் நிறுவனம் நான்காவது அடுக்கு அம்சம் பெற்றது. ஆக, மரணம் ஏற்படுத்தக் கூடிய கொடிய கொரோனா வைரஸை, வூஹான் நச்சுயிரியல் நிறுவனத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் சரியாகக் கையாளாததால் இந்த வைரஸ் அங்கிருந்து பரவியது என்று ஒரு பக்கம் பொய்ப் பரப்புரை. இன்னொரு பக்கம், சீன விஞ்ஞானிகள் உயிரியல் ஆயுதங்களைத் தயார் செய்யும்போது, அது தவறிப்போய் வெளியே பரவியிருக்கிறது என்று பரப்புரை.

இந்த பரப்புரைகளின் பின்னிருக்கும் பொய்த்தன்மையை ஆராய்வதற்கு முன்பு இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வூஹான் நச்சுயிரியல் நிறுவனம் சரியான பாதுகாப்பு அம்சங்களைப் பெறவில்லை என்று சொல்வதால், அங்கே நச்சுயிரியல் நிறுவனத்தின் உரிமம் தடை செய்யப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது; சீனாவால் சொந்த நச்சுயிரியல் சார்ந்த சொந்த ஆய்வுகளை செய்யமுடியாது. அதேபோல, சீன அரசு பல நாடுகளுக்கும் இழப்பீடு தர வேண்டும். சீனாவின் மீது இப்படி குற்றம் சுமத்துவதால், இது போன்ற அரசியல் ஆதாயங்கள் இருப்பதால், அரசியலில் இருப்பவர்களும் இந்தப் பொய்ப் பரப்புரைகளுக்குத் துணை நிற்கிறார்கள். ஏன், சில நாடுகளில் அவர்களே முன்னின்று பரப்பவும் செய்கிறார்கள். நோய் தொடர்பான இப்பேர்ப்பட்ட வதந்திகள் புதிதும் இல்லை. எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் ஹெச். ஐ. வி வைரஸை அமெரிக்கா தயாரித்து, ஆப்பிரிக்காவில் பரப்பியதாக கட்டுக்கதைகள் கூட உண்டு. ஆனால், இம்மாதிரி விஷயங்கள் உண்மையைக் கண்டறிவதில், மக்களிடம் உண்மையைக் கொண்டு செல்வதில் கடும் சவால்களை ஏற்படுத்துகின்றன.

கொரோனா வைரஸ் எங்கிருந்து தொடங்கியது?

கடந்த ஆண்டு நவம்பரிலேயே சீனாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடங்கிவிட்டாலும், சீன மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் திசம்பர் மாத இறுதியில்தான் இதன் வீரியத்தை உணர்ந்தார்கள். உடனடியாக, நோய்த் தொற்று இருப்பவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து, இந்த வைரஸின் மரபுத் தொகுதியைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஜனவரி தொடக்கத்தில், சீன விஞ்ஞானிகள் இதற்கான விடையையும் பெற்றார்கள். உடனடியாக உலக சுகாதார அமைப்பினருக்கு, இதை அனுப்பினார்கள். விஞ்ஞானிகளிடம் ஏற்கனவே உள்ள நோய் உண்டாக்கும் கிருமிகளின் மரபுத் தொகுதியோடு பொருத்திப் பார்த்தார்கள். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் கைரேகையை, ஏற்கனவே தங்களிடம் உள்ள குற்றவாளிகளின் கைரேகையோடு பொருத்திப் பார்ப்பது போல இது. அப்படிப் பொருத்திப் பார்க்கையில், இப்போது பரவிக்கொண்டிருக்கும் SARS-CoV-2 கொரோனா வைரஸின் மரபுத் தொகுதியானது, ரினோலோஃபஸ் அஃபினிஸ்(Rhinolophus affinis) என்னும் வௌவால்களிடம் காணப்படும்RaTG13 வைரஸின் மரபுத் தொகுதியோடு 96 சதவீதம் ஒத்துப் போனது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு சார்ஸ் வைரஸ் தாக்கியபோது, இத்தனை துரிதத்தில் மரபுத் தொகுதியை ஒப்பிடும் தொழில்நுட்பம் நம்மிடம் அப்போது இல்லை.

நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கும் SARS-CoV-2 கொரோனா வைரஸின் மரபுத் தொகுதியானது, வௌவால் மட்டுமல்லாமல், பிற விலங்கினங்களிடமும் இருக்க வாய்ப்புள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் சட்டவிரோதமாகக் கடத்தப்படும் மலாய எறும்புண்ணிகளிடமும் SARS-CoV-2 போன்ற கொரோனா வைரஸ் உலவுகிறது. எறும்புண்ணிகளிடம் உலவும் கொரோனா வைரஸின் மரபுத் தொகுதி முழுமையாக ஒத்துப்போகவில்லை என்றாலும், வைரஸின் பரப்பில் உள்ள ஏற்பிகள் ஒன்றுபோல இருக்கின்றன.

ஒப்பீட்டளவில், SARS-CoV-2 கொரோனா வைரஸ் வௌவால்களிடம் இருந்து இன்னொரு விலங்கின் வழியாகவோ அல்லது நேரடியாகவோ மனிதனுக்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால், எறும்புண்ணிகளிடம் மற்றும் பிற உயிரிகளிடம் இருந்தும் வந்திருக்கிறதா என்பதைக் கண்டறியும் ஆய்வுகள் தேவை.

சீனர்கள் இதுபோன்ற விலங்குகளை உண்பதால் அவர்களுக்கு இந்த நோய்த் தொற்று வந்ததாகவும் வதந்தி இருக்கிறது. இது கிட்டத்தட்ட கொரோனா வைரஸ் தொற்றிய ஒரு மனிதனை, இன்னொரு மனிதன் சாப்பிடுவதால் இந்த வைரஸ் பரவுகிறது என்று சொல்வதற்குச் சமம். இந்த நோய்ப் பரவியதன் ஆதியைத் தெரிந்துகொள்ள விசாரணை நடந்தபோது, தொடக்க காலத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், அருகில் இருந்த விலங்கு சந்தைக்கும் போக்குவரத்து இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த சந்தையில், கடல் பிராணிகள் மற்றும் பிற வனவிலங்குகளை உணவுக்காக விற்றிருக்கிறார்கள். அந்த விலங்குகளில், ஏதேனும் ஒரு விலங்குக்கு SARS-CoV-2 கொரோனா வைரஸ் தொற்று இருந்திருக்கலாம், அதை உண்ணும்போது மனிதனுக்கு அந்த நோய் பரவியிருக்கலாம். நோய்த் தொற்று உள்ள விலங்கின் எச்சத்தின் அருகில் இருந்ததாலோ, அதை மிதித்ததாலோ கூட இது பரவியிருக்கலாம். மேலும், வௌவால்களிடம் இருந்து நமக்கு நேரடியாகக் கூட பரவியிருக்கலாம். இன்னும் துல்லியமாக எங்கிருந்து தொடங்கியது என்று தெரியவில்லை. அதற்குள், சீனர்களின் உணவுப் பழக்கத்தைக் குறை சொல்லும் நடவடிக்கையில் இறங்குவது எந்த கோணத்திலும் சரியில்லை.

சீனப் பெண் ஒருவர் வௌவால் சூப் அருந்துவது போல ஒரு காணொளி யூடியுப்பில் பரவலாக வெளியானதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். உள்ளபடியே சீன வம்சாவளி பெண் தான் என்றாலும் அவர் அமெரிக்கர். உலகம் முழுவதும் உணவு குறித்த தொலைகாட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர். அவர் அந்த நிகழ்வில் குடிக்கும் வௌவால் சூப் உள்ளபடியே சீனாவில் இல்லை. பசபிக் கடலில் உள்ள ஒரு தீவு பகுதியில். உண்மை என்னவென்றால், சூப் போல நன்றாக கொதிக்க வைக்கப்பட்ட உணவில் வைரஸ் மடிந்து விடும். அதனால், வௌவால் சூப் குடிக்கும் சீனர்களால் இது பரவியது என்பது அபத்தம்.

“வூகான் நச்சுரியியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர், தான் ஆய்வுக்குப் பயன்படுத்தி வந்த விலங்குகளை விற்றுவிட்டார், அங்கிருந்துதான் இந்த நோய்த் தொற்று பரவுவதாக” ஒரு செய்தி பரவியது. அந்த ஆய்வாளரின் நேர்மையைக் குழைக்கும் இந்த அபத்த செய்தியில், ஆய்வாளரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்கள். அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை என்றாலும், இதுபோல ஒரு ஆய்வாளரின் மீது இந்த இக்கட்டான சூழலில் குற்றம் சுமத்துவது அரசியல் பயன்பாட்டுக்காக மட்டுமே அன்றி, அதில் எந்த உண்மையும் இல்லை.

SARS-CoV-2 மனிதன் உருவாக்கிய ஆயுதமில்லை

உயிரியல் ஆயுதங்கள் தயாரிக்கப்படுகிறது. அடுத்த உலகப்போர் அப்படித்தான் தொடங்கப் போகிறது என்று நமக்கு பொதுவாகவே ஒரு நம்பிக்கை இருக்கிறது. இப்படி ஒரு வைரஸ் தொற்று ஏற்படும் போது உடனடியாக நம்முடைய மனமும் இரண்டு விஷயங்களையும் முடிச்சுபோட்டுக் கொள்கிறது.

கொரோனா வைரஸை உயிரியல் ஆயுதமாக சீன ஆய்வாளர்கள் தயாரித்து வந்தார்கள் என்னும் செய்தியைக் கேட்டதும், நச்சுயிரியல் விஞ்ஞானிகள் நகைக்கிறார்கள். உயிரியல் ஆயுதம் செய்ய கொரோனா வைரஸைப் பயன்படுத்துவது என்பது குண்டூசியால் கொலை செய்ய நினைப்பதற்கு சமம் என்கிறார்கள். குண்டூசியாலும் கொலை செய்யலாம்தான். ஆனால், ஒரு கொலையாளி கத்தியைத்தானே எடுப்பான்? இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள SARS-CoV-2 கொரோனா வைரஸின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். SARS-CoV-2 கொரோனா வைரஸின் நோய்த் தொற்றினால் ஏற்படும் இறப்பு விகிதம் மூன்று சதவீதம். அதுவும், நோய்த் தொற்று பற்றிய எச்சரிக்கை மணி அடித்தவுடன் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த கொரோனா வைரஸ் ஏற்கனவே உடலில் கடிய வியாதி இருப்பவர்களுக்குத்தான் இறப்பு வரை கொண்டு செல்கிறது, மூப்பு அடைந்தவர்கள், உடல் ஊட்டச்சத்து குறைவானவர்கள் முதலியோர் தான் பலியில் பெரும்பங்கு. இல்லையென்றால் குணப்படுத்திவிட முடிகிறது. எபோலா வைரஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள். எபோலா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட இறப்பு விகிதம் தொண்ணூறு சதவீதம். இவ்வகை வைரஸ்கள் வேறு குடும்பத்தைச் சார்ந்தது. இன்னும் கொடிய வகை வைரஸ்களும் உண்டு. அப்படியிருக்கையில், உயிரியல் ஆயுதம் தயாரிக்க விஞ்ஞானிகள் ஏன் கொரோனா வைரஸைத் தேர்வு செய்ய வேண்டும்?

இதையெல்லாம் விட SARS-CoV-2 வைரஸை மனிதன் உருவாக்கி இருக்க சாத்தியமே இல்லை என்பதுதான் உண்மை. SARS-CoV-2 கொரோனா வைரஸின் மரபுத் தொகுதியை உடனிருந்து ஆய்வு செய்தவர்கள், “SARS-CoV-2 வைரஸ் தொடங்கிய இடத்தின் அருகாமை (The Proximal origin of SARS-CoV-2)” என்னும் தலைப்பில் அண்மையில் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அந்த ஆய்வின் முடிவில், இந்த வைரஸை கண்டிப்பாக மனிதன் உருவாக்கி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது தெரிய வருகிறது.

SARS-CoV-2 கொரோனா வைரஸின் பரப்பில் உள்ள இணைப்பியும் (binder), மனிதனின் செல்களில் உள்ள ஏற்பியும்(receptor) இணைய வேண்டும்; அப்படித்தான் நோய்த் தொற்று ஏற்பட முடியும். மனிதனின் செல்களில் பல வகை ஏற்பிகள் உள்ளன. இதில், வைரஸ் எப்படி மனித செல்களுடன் இணைகிறது என்பதைத் தெரிந்து கொண்டால்தான் மருந்து கண்டுபிடிக்க முடியும். தடுப்பூசி தயரிக்க முடியும். SARS-CoV-2 வைரஸின் வடிவத்தையும், மரபுத் தொகுதியையும் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆரம்பகால உயிர்வேதியியல் சோதனைகளின் அடிப்படையில், இந்த வைரஸின் இணைப்பி, மனிதனின் ACE2 வகை ஏற்பியுடன் பிணைவதாகத் தெரிகிறது; கணினிக் கணக்கீடுகளும் இதையேதான் சொல்கிறது. மனிதனின் ACE2 வகை ஏற்பியுடன் இணைய சாத்தியமுள்ள இணைப்பிகள் என்று இதுவரை நமக்குத் தெரிந்த வைரஸ்களைப் பயன்படுத்தி நாம் ஆய்வு செய்து, அதை ஒரு தொகுதியாக வைத்திருக்கிறோம். நம்மிடம் இருக்கும் தகவலை ஆராய்கையில், SARS-CoV-2 வைரஸின் இணைப்பி, மனிதனின் ACE2 வகை ஏற்பியுடன் இணைய சாத்தியம் இருக்கிறது; ஆனால் “எளிதில் இணைவதற்கு உகந்ததில்லை” என்று சொல்கிறது. அதுமட்டுமல்லாமல், வைரஸின் இணைப்பியில் உள்ள சில அடிப்படை மூலக்கூறுகள், மனிதனின் ACE2 வகை ஏற்பியுடன் இணைய சாத்தியம் இல்லை என்றும் நம்மிடம் இருக்கும் தகவல்கள் சொல்கின்றன. ஆக, இந்தத் தகவலே நமக்குப் புதிதுதான். SARS-CoV-2 கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு முன்னால், மனித குலத்துக்கு இப்படியொரு சாத்தியம் இருப்பதே தெரியாது. ஒரு வைரஸை ஆயுதமாக உருவாக்குபவன், மனிதனுடன் இணைய ஏதுவாக இல்லாத ஒரு இணைப்பியை எப்படி உபயோகிப்பான்? மொன்னை கத்தியை தயாரித்து கொலை செய்வது போல.

இப்படி பல கோணங்களில் ஆராய்ந்து, மனிதன் உருவாக்க சாத்தியமே இல்லாத வைரஸ் இது. கண்டிப்பாக, இயற்கையிடம் இருந்து, குறிப்பாக வனவிலங்குகளிடம் இருந்து நமக்கு எப்படியோ தொற்றியிருக்க வேண்டும் என்று இந்த ஆய்வு அடித்துச் சொல்கிறது. இந்த ஆய்வை நடத்தியவர்கள் சீன விஞ்ஞானிகள் அல்ல; அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டனைச் சார்ந்தவர்கள். எனவே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சீன விஞ்ஞானிகள் பொய் சொல்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. எனவே, மரபியல் தொழில்நுட்பத்தால் சீனா செய்யும் உயிரியல் ஆயுதம் இந்த கொரோனா வைரஸ் என்னும் கட்டுக்கதையைத் தூர வைப்பதே நல்லது.

கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறிதல்

SARS-CoV-2 கொரோனா வைரஸின் மரபுத்தொகுதி கிடைத்ததும், சீனாவிலிருந்து உலக சுகாதார மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உலகளாவிய நச்சுரியல் மையங்கள், இந்தத் மரபுத்தொகுதியின் தகவலை வைத்து, ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியும் பரிசோதனை முறைகளைப் பற்றி ஆய்வு செய்கின்றன. நோய்த் தொற்றுக்கு மருந்துகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் ஒருவருக்கு நோய்த் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிவதும். தொற்று இருப்பதை எவ்வளவு எளிதில் கண்டறிகிறோமோ, அதைப் பொருத்துத்தான் அவரை பிறரிடம் இருந்து தனிமைப்படுத்த முடியும், மருத்துவம் செய்ய முடியும். ஜெர்மனியின் பெர்லினில் உள்ள நச்சுயிரியல் நிறுவனம், ஜனவரி இரண்டாம் வாரத்தில், நோய்த் தொற்றைக் கண்டறியும் பரிசோதனை முறையை வெளியிடுகிறது. உலக சுகாதார மையம், உடனடியாக இந்த கருவி தேவைப்படும் பல நாடுகளுக்கும் அனுப்பி வைக்கிறது. அதுமட்டுமல்லாமல், பல்வேறு ஆய்வகங்களும் சொந்தமாக பரிசோதனை முறைகளையும் பின்பற்றுகின்றன. இந்தப் பரிசோதனையின் முடிவுகள் பன்னிரெண்டு முதல் இருபத்தி நான்கு மணி நேரத்தில் கிடைத்து விடுகிறது.

ஆனால், இதுவரை தெளிவாகத் தெரியாத ஒரு விஷயம், ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பதைக் கண்டறிய குறைந்த பட்சம் எத்தனை நாட்கள் அவருக்கு நோய்த் தொற்று இருக்க வேண்டும் என்பதுதான். வெளியே அறிகுறிகள் தெரியவில்லை என்றாலும், சில நோய்கள் ஓரிரு நாட்களிலேயே பரிசோதனையின் முடிவில் தெரிந்துவிடும். ஆனால், இந்த கொரோனா வைரஸ் தொற்று எத்தனை நாளில், பரிசோதனையிலாவது தெரியும் என்பது தெரியவில்லை. அது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதற்குள்ளாக நிறைய வதந்திகள் பரவி வருகிறது. ஒரு காணொளியில் ஒருவர் கழுத்தில் கை வைத்துத் தொட்டுப் பார்த்து வைரஸ் தொற்று இருக்கிறதா இல்லையா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மருத்துவர்கள் வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பதற்கே, நோயாளியைத் தொடாமல் பரிசோதனை செய்யக்கூடிய பிரத்தியேக கருவிகள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கே இன்னொரு செய்தியையும் கவனிக்கவேண்டும். உலகநாடுகள் அனைத்தும் இணைந்து கூட்டாக முயற்சி செய்யும்போது கொரோனா உட்பட பலவேறு சவாலான சிக்கல்களுக்கு தீர்வு சுளுவில் விரைவில் காண முடிகிறது. மேலும் இந்த ஆய்வுகளை நடத்தியது எல்லாம் அரசு சார்ந்த பொது ஆய்வு நிறுவனங்கள் தாம்; தனியார் நிறுவனங்கள் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இன்னும் இன்னும் வதந்திகள்

சீனாவில் இருந்து இங்கே கொண்டுவரப்படும் பொருட்களில் அந்த வைரஸ் ஒட்டிக்கொண்டு பயணித்து வரும் என்றும் ஒரு வதந்தி வருகிறது. “வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முகக் கவசம் வாங்கினால், அது சீனாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கிறது. அதனால், அங்கிருந்து முகக் கவசம் வாங்குவதா?” போன்ற மீம்ஸ்களும் உலா வருகின்றன. உயிரற்ற பொருட்களின் மீது வைரஸால் நீண்ட நேரம் செயல்பட முடியாது. அதனால், சீனாவில் இருந்து பொருட்கள் வருவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. நோய்த் தொற்று உள்ள ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவும் என்பது மட்டுமே உண்மை. அதே போல, சீனாவில் இருந்து வந்தாலே இந்த வைரஸ் இருக்கும் என்றும் அர்த்தமில்லை. அயல் நாடுகளில் வசிக்கும் சீனர்களை வேற்றுமையாக நடத்தாதீர்கள் என்று அரசாங்கங்கள் வேண்டுகோள் விடுக்கின்றன. நோய்த் தொற்று உள்ள இடத்துக்குப் பயணித்தவர் தவிர மற்ற அனைவருமே பாதுகாப்புடன்தான் இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸுக்கு என்ன மருந்து என்று சொல்வதற்கு முன்னால், எதுவெல்லாம் மருந்தில்லை என்று பேசுவதுதான் அவசியமாகிறது. வாட்ஸாப் மருத்துவர்கள் நிறைய சொல்கிறார்கள். தேங்காய் எண்ணெயில் இருந்து கொரோனா வைரஸுக்கு மருந்து தயாரிக்கப்பட்டு வருபதாக ஒரு செய்தி உலா வருகிறது. தேங்காயில் இருந்து கிடைக்கும் லாரிக் அமிலத்தைப் பயன்படுத்தி பாக்டீரியாக்களுக்கு எதிரான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், வைரஸை அழிக்கும் என்பதற்கு இதுவரை எந்த சான்றும் இல்லை. இன்னொரு விஷயம் வைட்டமின்-சி அதிகமிருக்கும் உணவுப்பொருட்களையும், மாத்திரைகளையும் உட்கொள்ளுமாறு சொல்கிறார்கள். வைட்டமின்-சி என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும், மிளகு, எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களில் அதிகமிருக்கிறது. ஆனால், கொரோனா வைரஸுக்கு இவை எந்த வகையிலும் தீர்வாகாது. தீர்வில்லை என்றாலும் பரவாயில்லை, எதிர்ப்பு சக்திக்காக சாப்பிடுகிறோம் என்றால், அதுவும் அளவோடு இருப்பதே நல்லது. கொரோனா வைரஸ் மேல்-நுரையீரலைத் தாக்குவதால், மூச்சுத் திணறல் ஏற்படுகிறது, தொண்டை வறட்சி இருக்கிறது. ஆனால், சாதாரண சளியின் போது பாக்டீரியாக்களை அழித்து தொண்டை கரகரப்பைச் சரிசெய்ய உதவும் உப்பு நீர் மருத்துவம், வைரஸுக்கு எந்த வகையில் உதவாது.

எனக்கும் தினமும் வாட்ஸாப்பில் அனுப்புகிறார்கள். பத்து பூண்டுப் பற்களை கொதிநீரில் வேகவைத்து, பூண்டையும், நீரையும் குடிக்க வேண்டும் என்று. பூண்டு உண்பது நல்லதுதான். ஆனால், இது வைரஸ் தொற்றுக்கு மருந்தில்லை. ஏற்கனவே வேறு பிரச்சனை உள்ளவர்களுக்கு, மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல், இது போன்ற முறைகளைப் பின்பற்றும் போது வேறு நோய்கள் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

மிக மிக முக்கியமாகப் பேச வேண்டிய விஷயம், தற்போதைய இந்திய பண்பாட்டு சூழ்நிலையில் பசுவின் சாணத்தையும், கோமியத்தையும் சர்வரோக நிவாராணியாகப் பார்ப்பது. சமீபத்தில் ஒரு முக்கிய பிரமுகர், கோமியத்தால் எல்லா நோய்களும் குணமாகும், கொரோனா வைரஸ் உட்பட என்றிருக்கிறார். எந்த ஆதாரமும் இல்லாத இதுபோன்ற விஷயங்கள், கொரோனா வைரஸை விட வேகமாகப் பரவி வருகின்றன. பாபா ராம்தேவ் உட்பட பலரும் யோகாசனம் செய்தால் கொரோனா வைரஸ் தாக்கத்தை குணப்படுத்திவிட முடியும் என்கிறார்கள். யோகாசனம் பல வகைகளில் உடலுக்கு நன்மை பயக்கிறது என்றாலும், கொரோனாவுக்குத் தீர்வில்லை. சைவ உணவு பண்பாட்டு ஆதிக்கத்தால், அசைவ உணவு உண்பதால் கொரோனா பரவுமென்று ஒரு அபத்தம் இருக்கிறது. எந்த உணவாக இருந்தாலும், சரியாகப் பதப்படுத்தப்பட்டு, சமைக்கப்பட்டால் நல்லதுதான். ஒரு சில தினங்களுக்கு முன்பு ஒரு அமைச்சர் சொல்லியிருக்கிறார், “சூரிய ஒளியில் நின்றால் கொரோனா ஓடிவிடுமென்று”. இது மட்டும் உண்மையென்றால், மருத்துவமனைக்குள் இல்லாமல் தெருவிலேயே நோயாளிகளை வைத்திருப்பார்கள்தானே? வெயில் வந்தால், கொரோனா அழிந்துவிடும், சூடு பட்டால் அழிந்துவிடும் போன்ற எந்த செய்திக்கும் இதுவரை அறிவியல்பூர்வ சான்றில்லை. மழைக்காலங்களில் பரவும் ஜலதோஷம், வெயில் காலத்தில் குறைந்துவிடும் என்பதுபோல கொரோனா வைரஸை அணுகுவது சரியல்ல. ஜனப்பெருக்கம் அதிகமுள்ள நம் நாட்டில், ஒருவருக்கு நோய்த் தொற்று இருந்தால் எந்தப் பருவமாக இருந்தாலும், எளிதில் பரவிடும்.

வதந்திகளின் உச்சம் என்று நான் கருதுவது, “Go Corona” என்று பதாகைகளில் எழுதி கோஷம்போட்டதுதான். அவ்வளவு எளிதாக கொரோனா போய்விடுமென்றால், எல்லா வீடுகளின் அலுவலகங்களின் முகப்பிலும், “Go Corona” என்று எழுதிவைத்தால் போதுமே!

கொரோனா வைரஸ்: என்ன மருந்து?

இவ்வளவு நேரம் சொன்ன கதையின் முக்கிய இடத்துக்கு வந்திருக்கிறோம். தற்போது அதிதீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கும் SARS-CoV-2 கொரோனா வைரஸுக்கு மட்டுமல்ல பிற கொரோனா வைரஸுக்கும் இதுவரை மருந்தும், தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரஸ்கள் பெரும்பாலும் மேல்-நுரையீரல் பகுதியை பாதிப்பதால், செயற்கை சுவாசம் கொடுக்கப்படுகிறது. உடல் தானே வைரசுக்கு எதிராக செயல்பட்டு அழிக்கிறது. இடைப்பட்ட காலத்தில் செயற்கை சுவாசம் முதலிய உடல் இயக்கத்துக்கு உதவும் பணிகளை செய்கிறோம். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஓராண்டுக்கு மேல் ஆகும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். எனவே, சுகாதாரமாக இருப்பதுவே தற்போதைய சூழலில் முக்கியம். அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கை கழுவுவது, தும்மல் மற்றும் இருமல் வந்தால், கைக்குட்டையால் மூடிக்கொள்வது, கிருமி சுத்திகரிப்பான்கள் பயன்படுத்துவது ஆகியவற்றை நாம் கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசு, கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சுகாதாரமாக இருப்பது பற்றிய விளக்க காணொளியும் வெளியிட்டிருக்கிறது. லேசாக தண்ணீரில் கைகளை நனைத்துவிட்டு, கை கழுவிவிட்டோம் என்று நினைத்துக் கொள்வோம். எப்படி தேய்த்துக் கை கழுவ வேண்டும் என்றும் விளக்கியுள்ளார்கள். யூடியூபில் பார்க்க முடியும்.

சமீபத்தில் நான் பார்த்த ஒரு காணொளியில், ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் முகக் கவசங்களை ஒன்று இருபது ரூபாய் என்று விற்றுக்கொண்டிருக்கிறார். வாங்க வரும் மக்கள், அந்த முகக் கவசங்களை துணி வாங்கும்போது தடவிப் பார்த்து வாங்குவது போல இதையும் தடவிப் பார்த்து வாங்கினார்கள். முகக் கவசங்களை தடவும்போது, கைகளில் இருக்கும் கிருமிகள் அங்கே ஒட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. முகக் கவசம் பயன்படுத்திய பின்னர், அதை நீக்கும்போதும் கைகளால் வெளிப்புறம் தொடுவதால், கிருமிகள் ஒட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமல்லாமல், முகக் கவசம் அணிந்த பின்னர், கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தால் முகக் கவசத்தை பாதி கழற்றிவிட்டு பேசுகிறோம். சும்மா எங்கேயோ இருந்த கிருமிகளை எளிதாக நாமே வாய்க்குள் அனுப்பும் முயற்சி இது. எனவே, முகக் கவசம் பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் நிறைய இருப்பதால், மருத்துவர்கள் இதைப் பரிந்துரைப்பதில்லை. உங்களுக்கு நோய்த் தொற்று இருந்தால், பிறருக்கு பரவாமல் இது தடுக்கும் என்பதுவரை தான் உபயோகம். அதனால், முகக் கவசம் இல்லை என்று யாரும் கவலைப்படத் தேவையில்லை. சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அத்தியாவசியமான கிருமி சுத்திகரிப்பான்கள், முகக் கவசம் போன்ற பொருட்களை அதிகம் வாங்கி வீட்டில் அடுக்கி வைக்காமல் இருப்பதும் முக்கியம்.

இந்த சூழ்நிலையில், நாமும் சுத்தமாக இருந்து, சுற்றத்தையும் சுகாதாரமாக வைத்திருப்பதே ஒன்றே நல்லது. சுத்தமாக இருப்பது என்பது வதந்திகள் இல்லாத வார்த்தைகளும்தான்.

இ.ஹேமபிரபா | பொருட்களின் அறிவியல் (materials science) துறையில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது இஸ்ரேலில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக அறிவியல் கட்டுரைகள், கதைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் எழுதி வருகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடான ‘துளிர்’ சிறுவர் இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். இலக்கியத்திலும் இவருக்கு ஆர்வம் இருக்கிறது. அறிவியல் எழுத்துக்களே சமூகத்தில் நிலவும் அறியாமைகளைப் போக்கும் என்று நம்பக் கூடியவர்.