பாம்பு, தேள், குளவி அல்லது ஏதோ பூச்சி கடித்து விட்டால் செய்ய வேண்டியது என்ன ?

நாம் கிராமப்புறங்களில் பார்த்திருப்போம். ஏதோ பாம்போ, குளவியோ, தேளோ கடித்து விட்டால்- மஞ்சள் தடவுவது, சுண்ணாம்பு அப்புதல், சாணி, மண் தடவுவது ஆகிய செயல்கள் சர்வ சாதாரணமாக நடக்கும். இவை அனைத்தும் அறிவியல் பின்புலன் அற்றவை. ஆகவே, நாம் ஏதோ கடித்து விட்டால் என்ன செய்ய வேண்டும்??

1) பாதிப்புக்கு உள்ளானவர் பதற்றம் அடைய கூடாது. பதற்றம் அடைந்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். விஷம் விரைவாக உடலில் கலக்கும். ஆகவே, அமைதியாக இருக்க வேண்டும்.

2) சினிமாவில் பார்த்திருப்போம்; யாருக்கோ பாம்பு கடித்து விட்டால், துணியை கிழித்து மிக இறுக்கமாக கட்டுவார்கள். அதை செய்ய கூடாது. அப்படி இறுக்கமாக கட்டினால், அந்த இடத்தில் ரத்த ஓட்டம் பாதிக்கும். அந்த இடம் செயலிழந்து அழுகி போகும்.

3) கடிபட்ட நபர் ஓடவோ, நடக்கவோ கூடாது. அப்படி செய்கையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அது விஷத்தின் பரவலை அதிகரிக்கும். எனவே, அமைதியாக ஓரிடத்தில் இருத்தல் அவசியம்.

4) கடிபட்ட இடத்தை ஓடும் சுத்தமான நீர் கொண்டு சோப்பு போட்டு கழுவ வேண்டும். பல சமயங்களில் பாம்போ, தேளோ லேசாக தோலில் மட்டும் சீண்டியிருக்கும். சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் பெருமளவு விஷம் ரத்தத்தில் கலப்பதை தடுக்கலாம். வீக்கம் இருந்தால் ஐஸ்கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். இதுவே, முதலுதவி.

5) உங்களை கடித்த பாம்பையோ, தேளையோ அடையாளம் கண்டுகொள்வது சிறப்பு. பல பாம்புகள் விஷமற்றவை; விஷமுள்ள பாம்புகள் நரம்பு மண்டலம்(ராஜ நாகம்), ரத்தநாளங்கள் (விரியன்) ஆகிய பகுதிகளை தாக்கும். எந்த பாம்பு என்று அடையாளம் கொண்டு மருத்துவரிடம் கூறினால், தகுந்த சிகிச்சையை விரைவில் பெற இது உதவும்.

6) பாம்பை கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் தலை, வால் ஆகிய பகுதியில் அடிக்க வேண்டாம். நான் ஏற்கனவே கூறிய வண்ணம் சில பாம்புகள் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்; சில பாம்புகள் ரத்த நாளங்களை பாதிக்கும்; சில விஷமற்றவையாய் இருக்கும். பாம்பின் தலை, வால் பகுதி கொண்டு தான் அதன் தன்மையை நிறுவ முடியும். ஆகவே, அந்த பகுதியை சேதம் செய்ய வேண்டாம்.

7) உங்களுக்கு பக்கத்தில் தனியார், அரசு ஆகிய இரண்டு மருத்துவமனைகளும் இருந்தால், அரசு மருத்துவமனைக்கே அழைத்து செல்லுங்கள். பல தனியார் மருத்துவமனைகளில் பாம்பு கடிகளை அட்மிட் செய்வது இல்லை. மேலும் விஷமுறிவு மருந்தான ASV போன்றவை நிலுவையில் இருக்காது. ஆகவே, அரசு மருத்துவமனை அழைத்து செல்வதே சிறப்பு.

8) மஞ்சள், சாணி, போன்றவை அப்ப வேண்டாம். சாணம் என்பது கழிவுப்பொருள். அதில் உள்ள பாக்டீரியக்கள், வைரஸ் போன்ற கிருமிகள் நமது காயத்தின் மீது அப்பும் போது ரத்தத்தில் கலந்து தீவிர Tetanus போன்ற உயிரையே கொல்லும் கிருமித்தொற்று பாதிப்புகளை உண்டாக்கும்; மஞ்சள் போன்றவை நமது வீட்டில் சுத்தமாக மூடப்படாமல் இருக்கும். அதில் கிருமிகள் இருக்கும்; மஞ்சளில் உள்ள செயற்கை கெமிக்கல்கள் ரத்தத்தில் கலந்து மேலும் ஊறு விளைவிக்கும். ஆகவே, அவற்றை தவிர்ப்பது நல்லது.

நான் மேலே கூறிய முதலுதவிகளை செய்து மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து சென்றாலே போதும்; பாதிப்பில் இருந்து மருத்துவர்கள் நம்மை உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றுவார்கள்.

Dr.Aravindha Raj